CRIME
“பிரெஸ்ஸா கார் இல்லையா..? அப்போ கல்யாணம்…!” தாலி கட்டும் நேரத்தில் போலீஸ் மாப்பிளை செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சி உறைந்த மணப்பெண் விட்டார்..!!
ஹரியானா மாநிலம் சோனிபட்டில், வரதட்சணையாகக் கேட்ட கார் கிடைக்காததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டு ஊர்வலத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனிபட் மேற்கு ராம்நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐடிஐ பட்டதாரியான சுபாஷ் குமார் என்பவரின் மகளுக்கும், கோஹானா காந்தி நகரைச் சேர்ந்த டெல்லி காவல்துறை ஊழியர் குல்தீப் என்பவருக்கும் 2026 ஜனவரியில் இடைத்தரகர்கள் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறிய மணமகன் வீட்டார், ஏப்ரல் 26-ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பர் 20-ஆம் தேதி திருமணத் தேதி குறிக்கப்பட்ட பிறகு தங்கள் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர்.
திருமணத் தேதி நெருங்கியதும், மணமகன் குல்தீப் மற்றும் அவரது தாயார் ரேஷம்ரதி ஆகியோர் தங்கச் சங்கிலி, மோதிரம், வெள்ளிக் கொலுசுகள், குடும்பத்தினருக்கு விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் ஒரு ‘பிரெஸ்ஸா’ ரக காரை வரதட்சணையாகக் கேட்டு வற்புறுத்தினர். மணமகளின் தந்தை தனது நிதி நிலைமைக்கு ஏற்ப சுமார் ரூ.8 முதல் ரூ.9 லட்சம் மதிப்புள்ள ‘ஹூண்டாய் ஆரா’ காரை முன்பதிவு செய்திருந்தபோதிலும், மணமகன் தரப்பு அதனை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற சடங்கின்போது பெண் வீட்டார் வழங்கிய தளபாடங்கள் மற்றும் பொருட்களைத் தரம் குறைந்தவை எனக் கூறி ஏளனம் செய்ததுடன், கூடுதல் நகைகளையும் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
நவம்பர் 20-ஆம் தேதி முர்தால் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு ஊர்வலம் வந்தடைந்தபோது, பிரெஸ்ஸா கார் இல்லாததைக் கண்டு ஆத்திரமடைந்த மணமகனும் அவரது தாயாரும் திருமணத்தை நடத்த மறுத்துவிட்டனர். இடைத்தரகர்களும் இணைந்து கார் மற்றும் நகைகளுக்காக பெண் வீட்டாருக்கு அழுத்தம் கொடுத்ததோடு, கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஊர்வலத்தைத் திருப்பி அழைத்துச் சென்றுவிடுவதாக மிரட்டல் விடுத்தனர். பெண் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் அதனை ஏற்காமல் தகாத வார்த்தைகளால் திட்டி, தள்ளுமுள்ளு மற்றும் சண்டையில் ஈடுபட்ட மணமகன் தரப்பினர், நள்ளிரவில் திருமணத்தை நிறுத்திவிட்டு ஊர்வலத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பெண் வீட்டாரால் வழங்கப்பட்ட தளபாடங்கள், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மணமகன் வீட்டார் திருப்பித் தராமல் மோசடி செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மணமகளின் தந்தை சுபாஷ் குமார் அளித்த புகாரின் பேரில், டெல்லி காவலர் குல்தீப், அவரது தாய் ரேஷம்ரதி, சகோதரர், மைத்துனி மற்றும் இரண்டு இடைத்தரகர்கள் உட்பட ஆறு பேர் மீது செக்டர் 27 காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
