LATEST NEWS
“இதை எப்படி சமைத்துச் சாப்பிடுவது..?” ரேஷன் அரிசியில் மொய்த்த வண்டுகள்… கழிப்பறை அருகே இயங்கும் கடையில் அவலம்.. முதல்வர் சொன்னபடி நடவடிக்கை பாயுமா..? கொந்தளித்த பொதுமக்கள்..!!
திருச்சி அரியமங்கலம் சீனிவாசன் நகரில் செயல்பட்டு வரும் ‘அமராவதி ரேஷன்’ கடையில், வண்டுகள் மொய்த்த தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தக் கடையில் வழங்கப்படும் அரிசியில் வண்டுகள் அதிகளவில் காணப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நவம்பர் 21-ஆம் தேதி குடும்ப அட்டைதாரர் ஒருவர் வாங்கிய புழுங்கல் அரிசியில் சிறியதும் பெரியதுமாக ஏராளமான வண்டுகள் மொய்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த அரிசியை வாங்க மறுத்து ரேஷன் கடை ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ரேஷன் கடை இயங்கி வரும் கட்டிடத்தின் தரைத்தளம் மிகவும் சேதமடைந்துள்ளதால், அங்கிருந்து வரும் வண்டுகள் அரிசி மூட்டைகளில் ஏறி மொய்ப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி, ரேஷன் கடைக்கு மிக அருகிலேயே பொதுச் சுகாதாரக் கழிப்பறைகள் அமைந்திருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், அங்கிருந்து வரும் விஷ வண்டுகள் மற்றும் புழுக்கள் ரேஷன் பொருட்களில் புகுந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கழிப்பறைக்கு அருகிலுள்ள இந்தக் கடையை உடனடியாக வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் போராட்டம் மற்றும் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ரேஷன் கடைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரிசியில் வண்டுகள் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வண்டு மொய்த்த அரிசி மூட்டைகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், சேதமடைந்துள்ள இந்த ரேஷன் கடைக் கட்டிடத்தை முழுமையாகச் சீரமைக்கும் வரை, தற்காலிகமாக வேறொரு கட்டிடத்தில் கடையை நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட ரேஷன் அரிசி கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சட்டமன்றத்தில் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், கடந்த மே மாதம் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, “ரேஷன் கடைகளில் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது ஏழை மக்கள் உண்ணும் அரிசியில் வண்டுகள் மொய்த்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் எச்சரிக்கைக்கேற்ப இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
