LATEST NEWS
“மற்ற துறையில் என்றால் கூட பரவாயில்லை.. ஆனால் இதில் எப்படி வேடிக்கை பார்க்க முடியும்..?” கல்வித்துறை ஊழல் குறித்து மேடையில் வெடித்த முதலமைச்சர் விஜய்..!!
பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குக் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும் என்றும், அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2023-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்குக் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
முதல் கட்ட விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த 4-ந்தேதி நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட விழா சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் இன்றும், நாளையும் பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளின் மாணவ-மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றன.
விழாவில் பேசிய விஜய், தான் எடுத்த சில முயற்சிகளால் சிலரின் அடித்தளம் ஆடிப்போய் உள்ளதாகவும், அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள கல்வித்துறையிலும், பள்ளிகளின் பாதுகாப்பிலும் ஊழல் செய்வதா எனவும் கேள்வி எழுப்பினார். பள்ளிகளின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடி உள்ளதாகவும், கும்பகோணம் பள்ளி தீவிபத்தை நினைத்தால் மனது பதறுவதாகவும் குறிப்பிட்ட அவர், ஊழலை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் என்றும், மாணவர்கள் வாழ்க்கையில் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
