LATEST NEWS
“என்னடா இப்படி பண்றீங்க..!” சிசிடிவி கேமராவை கவனிக்காமல் திருடர்கள் செய்த லூட்டி.. சிரிப்பை அடக்க முடியாத நெட்டிசன்கள் மீம்ஸ்..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரண்டு திருடர்கள் சேர்ந்து சாக்கடை கால்வாயின் இரும்பு மூடியைத் திருடிச் சென்ற விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பகுதியில் சாலைப் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை இந்த இரு திருடர்களும் நோட்டமிட்டுள்ளனர். அங்கு காவலுக்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட அவர்கள், மெதுவாகச் சென்று சாக்கடை வடிகாலின் கனமான இரும்பு மூடியைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து நைசாக நழுவியுள்ளனர். மேலே இருக்கும் கடவுள் தங்களைப் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் அவர்கள் இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளனர்.
ஆனால், தங்களைக் கடவுள் பார்க்காவிட்டாலும், அங்கு மறைந்திருந்த சிசிடிவி கேமரா தங்களை அக்குவேறு ஆணிவேறாகப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதை அந்த மடையர்கள் அறிந்திருக்கவில்லை. இரும்பு மூடியைத் திருடிச் செல்லும் இவர்களது ஒட்டுமொத்தக் காட்சியும் கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதைப்பார்த்து நெட்டிசன்கள், “திருடுவதற்கான இவர்களது திட்டம் 10-க்கு 10 மதிப்பெண் பெறலாம், ஆனால் அதை மறைப்பதற்கான திட்டம் 0 மதிப்பெண் தான்” என்று சமூக வலைத்தளங்களில் இந்தத் திருடர்களைக் கலாய்த்து மீம்களைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து அகமதாபாத் போலீசார் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
