LATEST NEWS
விஜய்யுடன் யார் எட்டி பார்த்தால் என்ன..? லண்டனுக்கு ஏன் போகணும்? கோவை, மதுரைக்கு வாங்க… அண்ணாமலை புது ட்விஸ்ட்..!!
தமிழக முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க 6 நாள் பயணமாக லண்டன் சென்று, ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்ததாக அரசு அறிவித்தது. மேலும், அங்கிருந்த நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இருப்பினும், தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர்கள் இன்றி இப் பயணம் அமைந்ததும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படாததும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, லண்டன் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அங்கு சென்று முதலீடு கோருவது தேவையில்லாத அரசியல் என்று விமர்சித்துள்ளார். இங்கிலாந்து 3.4 டிரில்லியன் பொருளாதாரத்துடன் வெறும் 1% வளர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு நாடு என்றும், டாடா, மஹிந்திரா போன்ற இந்திய நிறுவனங்களே அங்கு அதிக முதலீடு செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தில் லண்டனை விட இந்தியா (4.1 டிரில்லியன்) மிகவும் மேம்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அண்ணாமலை, வெளிநாடு சென்று முதலீட்டாளர்களைச் சந்திப்பதை விட முதல்வர் விஜய் கோவை மற்றும் மதுரை போன்ற உள்ளூர் நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். உள்ளூர் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தொழிலை விரிவுபடுத்த ஊக்குவிப்பதே உண்மையான வளர்ச்சியைக் கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், உள்ளூர் தொழிலதிபர்களுக்கு 50% வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், லண்டன் பயணத்தின் மூலம் பெறப்பட்டதாகக் கூறப்படும் முதலீட்டு அறிக்கைகள் முரண்பாடாக இருப்பதாகவும் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார்.
