LATEST NEWS
“கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லையா..?” கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய முதியவருக்கு நேர்ந்த கொடூரம்… நொடியில் தலையில் விழுந்த எமன்… 11 நாட்கள் போராடி பிரிந்த உயிர்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் போது ஏற்பட்ட விபத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் 11 நாட்களுக்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார். ஏரோட்ரோம் சாலையில் உள்ள சீதாஸ்ரீ அபார்ட்மெண்ட் அருகே கடந்த அக்டோபர் 30-ம் தேதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வினோத் குமார் கஸ்லிவால் என்பவரின் தலையில் மெட்ரோ கட்டுமானப் பணியில் பயன்படுத்தப்பட்ட கிரேன் ஹூக் மோதியது. இதில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
கடந்த அக்டோபர் 30-ம் தேதி காலை கோயில் தரிசனத்தை முடித்துவிட்டு வினோத் குமார் கஸ்லிவால் வீடு திரும்பியபோது, சீதாஸ்ரீ அபார்ட்மெண்ட் எதிரே மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது கிரேன் செயல்பாட்டின் இடையே அதன் ஹூக் முதியவரின் தலையில் பலமாகத் தாக்கியதில் அவர் சாலையில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குடும்பத்தினர் அவர் நலமடைந்து திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில், 11 நாள்கள் போராடி அவர் உயிர் பிரிந்தது. இவர் மத்திய அரசு அச்சகத்தில் முதன்மை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏரோட்ரோம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரேன் ஆப்பரேட்டர் ஜஸ்வந்தைக் கைது செய்துள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் கிரேன் இயக்கப்பட்டது குறித்தும், கட்டுமான தளத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்தூரில் மெட்ரோ கட்டுமானப் பணிகளின் போது இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நிகழ்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
