CRIME
மகனுக்காகத் துப்பாக்கியுடன் வந்த தந்தை.. கர்பா பந்தலில் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நவராத்திரி கர்பா நிகழ்ச்சியின் போது, வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரக்ஷித் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி தரும் சம்பவம், எம்.ஐ.ஜி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணா பாக் காலனியில் அரங்கேறியுள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள சில இளைஞர்கள் கர்பா திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் பின்னணி குறித்துப் போலீசார் நடத்திய விசாரணையில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நீரஜின் மகன் கேசவ், தனது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாகச் சென்றபோது கர்பா பந்தலில் இருந்தவர்களிடம் வழிவிடுமாறு கேட்டுள்ளார். இதனால் கேசவிற்கும் கர்பா ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே கேசவ் இதுகுறித்துத் தன் தந்தை நீரஜிடம் தெரிவிக்க, கோபமடைந்த அந்த ஓய்வுபெற்ற அதிகாரி, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கர்பா பந்தலுக்கு விரைந்து வந்துள்ளார்.
பந்தலுக்கு வந்த நீரஜ், கூட்டத்தை நோக்கித் தனது கைத்துப்பாக்கியால் அடுத்தடுத்து இரண்டு முதல் மூன்று முறை சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த ரக்ஷித் என்ற இளைஞர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த எம்.ஐ.ஜி போலீசார் உடனடியாக விரைந்து வந்து, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நீரஜ் மற்றும் அவரது மகன் கேசவ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். ராணுவ அதிகாரி தனது மகனுடன் நின்று துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
