LATEST NEWS
தேசமே கண்ணீர்..! நள்ளிரவில் எதிரிக் கப்பல்களை வேட்டையாடியபோது கடற்படை பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.. அரபிக்கடலில் 60 மீட்டர் ஆழத்தில் உறைந்த வீர மரணம்..!!
இந்திய கடற்படையின் வீரப் பெண் அதிகாரி லெப்டினன்ட் கிரண் ஷெகாவத், கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று அரபிக்கடலில் நடந்த ஒரு பயங்கரமான விமான விபத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தார். 1988-ல் மும்பையில் பிறந்த இவர், கடற்படையில் பணியாற்றிய தந்தையின் வழியைப் பின்பற்றி, 2010-ல் இந்திய கடற்படை அகாதமியில் இணைந்தார். கடற்படையின் வான்வழிப் பிரிவில் கண்காணிப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்ற கிரண், கடற்படை அதிகாரியான விவேக் சிங் சோக்கர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தனது அசாத்திய திறமையால், 2015 ஜனவரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது, கடற்படையின் முதலாவது முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பங்கேற்ற அணிவகுப்பில் பெருமையோடு அணிவகுத்துச் சென்றார்.
இந்த வரலாற்று நிகழ்வு நடந்த அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது மார்ச் 24, 2015 அன்று இரவு, கோவாவிலிருந்து கடற்படையின் டோர்னியர் போர் விமானத்தில் எதிரிக் கப்பல்களைக் கண்காணிக்கும் நள்ளிரவுப் பணிக்காகக் கிரண் புறப்பட்டார். இரவு சுமார் 10 மணியளவில், கோவாவிற்கு தென்மேற்கே 37 கி.மீ தொலைவில் விமானம் எதிர்பாராதவிதமாக அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் முதன்மை விமானி கமாண்டர் நிகில் ஜோஷியை மீனவர்கள் மயங்கிய நிலையில் கடலில் இருந்து மீட்டனர். ஆனால், கிரண் ஷெகாவத் மற்றும் அவரது சக விமானி அபினவ் நகோரி ஆகியோர் கடலில் மாயமாகினர்.
கடற்படையினர் இரவும் பகலுமாகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மார்ச் 26 அன்று கடலுக்கு அடியில் சுமார் 60 மீட்டர் ஆழத்தில் விமானத்தின் இடிபாடுகள் கண்டறியப்பட்டன. அன்று இரவே, கடலுக்கு அடியில் மூழ்கியிருந்த அந்த விமானத்தின் உள்ளே இருந்து லெப்டினன்ட் கிரணின் உடல் கடற்படை முழ்காளர்களால் பத்திரமாக மீட்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றி, நாட்டிற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த இந்திய கடற்படையின் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையுடன் லெப்டினன்ட் கிரண் ஷெகாவத்தின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
