LATEST NEWS
அப்பாவும், பையனும் வீட்டில் எப்படி நடந்துக்குவாங்களோ.. அதை பொதுமேடையில் பேசுறாங்க… சத்யபாமாவை உருவக்கேலி செய்ததை கிழித்தெடுத்த அமைச்சர் நிர்மல்குமார்..!!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்யபாமாவை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பெட்டி பாமா, பல்டி பாமா” என்று விமர்சித்ததோடு அவரது உடல் தோற்றம் குறித்தும் பேசியிருந்தார். ஸ்டாலினின் இந்த சர்ச்சைக்குரிய உரைக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் தனது கண்டனப் பதிவில், “தாராபுரம் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உண்மையான ஆபாச மற்றும் ஆணாதிக்க முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், “தந்தையும் மகனும் தங்களது சொந்த வீட்டில் எப்படி நடந்துகொண்டார்களோ, தங்களின் உண்மையான முகம் என்னவோ, அதை மறைத்துத் தற்பொழுது மேடையில் தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தவெகவின் வேட்பாளர் சத்யபாமா ஒரு பட்டியலின (தலித்) பெண் என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எந்தவொரு பின்புலமும் இல்லாமல் அரசியல் களத்தில் தனியாக நின்று போராடிக் கொண்டிருக்கும் ஒரு பெண் குறித்து, இந்த வயதான காலத்தில் மு.க.ஸ்டாலின் இவ்வளவு மோசமாகவும், தரம் தாழ்ந்த முறையிலும் உருவக்கேலி செய்து பேசியிருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று தனது பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
