LATEST NEWS
“ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்.. இல்லைனா வெளியேறுவோம்” தவெக அமைச்சரவைக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பகிரங்க எச்சரிக்கை..!!
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சிலர், தங்களது கட்சித் தலைவர் விஜய்யை 2029 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திப் பேசி வருகின்றனர். தனியார் ஊடகம் நடத்தியக் கருத்துக்கணிப்பில் விஜய் மூன்றாவது இடம் பிடித்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் தீவிரமடைந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், “வரும் 2029ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி மட்டும்தான்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஒருவேளை இக்கருத்துக்குத் தவெக தலைமை உடன்படவில்லை என்றால், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தானும், உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனும் தங்களது பொறுப்புகளைத் துறந்து, தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர்கள் உடனடியாக வெளியேறுவோம் என்று சபதம் செய்துள்ளார். இந்த அறிவிப்பு தவெக-காங்கிரசுக்கு இடையே புதிய அரசியல் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
