CRIME
இரவில் கேட்ட திடீர் அலறல் சத்தம்.. தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை வழிமறித்து பாலியல் அத்துமீறல்… தடுக்க வந்த நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
சென்னை அசோக் நகரில் வேலை முடிந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு நடந்து சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மூன்று இளைஞர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி இரவு அவர் வழக்கம் போல வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்தப் பெண் அசோக் நகர் 15-வது தெரு, 2-வது அவென்யூ சந்திப்பு அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை வழிமறித்து கிண்டல் செய்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் பேசி அவரிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிடவே, அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அதே பகுதியில் வேலை செய்யும் அவரது நண்பர்கள் ஓடிவந்து அந்த நபர்களைத் தடுக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த மூன்று நபர்களும் தடுக்க வந்த நண்பர்களையும் கையால் தாக்கியுள்ளனர்; பின்னர் பொதுமக்கள் அங்கு திரளத் தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து அசோக் நகர் R-3 காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், அசோக் நகரைச் சேர்ந்த ராபின் நெல்சன் (22), விஷ்ணுகுமார் (25), மனோகார்த்திக் (19) ஆகிய மூன்று பேரை செப்டம்பர் 21 அன்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இவர்களில் ராபின் நெல்சன் கல்லூரி மாணவர் என்பதும், மற்ற இருவர் பெயிண்டர் மற்றும் மெக்கானிக்காக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் செப்டம்பர் 22 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
