LATEST NEWS
“கேஸ் தீர்ந்துபோச்சா..? கவலைய விடுங்க.. ” இனி 10 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி..! ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் மாஸ் பிளான்..!!
மளிகைப் பொருட்களை 10 நிமிடங்களில் டெலிவரி செய்து வரும் ஸ்விக்கியின் ‘இன்ஸ்டாமார்ட்’ நிறுவனம், இனி தங்களது செயலி மூலம் எல்.பி.ஜி சிலிண்டர்களையும் 10 நிமிடங்களில் விநியோகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக ‘இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்துடன் ஸ்விக்கி கைகோர்த்துள்ளது. இந்த புதிய திட்டம் முதற்கட்டமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் இந்த அதிவேக சிலிண்டர் விநியோக சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த புதிய சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் 10 கிலோ எடையுள்ள ‘ஹெச்பி நவ்யா’ ஃபைபர் சிலிண்டரையும், சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் சிலிண்டரையும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். மிக முக்கியமாக, இந்த சிலிண்டர்களை வாங்குவதற்கு ஏற்கனவே எரிவாயு இணைப்பு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வழக்கமான முறையைப் போலவே, முதல்முறை வாங்கும்போது வாடிக்கையாளர்கள் காலி சிலிண்டரைத் தர வேண்டியதில்லை. ஆனால், அடுத்தடுத்த ஆர்டர்களின் போது பழைய காலி சிலிண்டரைக் கொடுத்துவிட்டு புதிய சிலிண்டரைப் பெற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
வீடுகளை அடிக்கடி மாற்றும் வாடகைதாரர்கள், வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இந்த 10 நிமிட சிலிண்டர் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், எச்பிசிஎல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முறையான பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலமாகவே இந்த சிலிண்டர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பாக டெலிவரி செய்யப்படும் என்றும் ஸ்விக்கி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
