LATEST NEWS
“இந்த குட்டி கதையெல்லாம் சொல்லாதீங்க” உங்களுக்கு 3 நாள் டைம் இருக்கு… ஆதாரத்தோட வாங்க சார்.. முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி விடுத்த 3 நாள் கெடு சவால்..!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மிகக் கடுமையான வார்த்தை மோதல் வெடித்தது. பேரவையில் காரசாரமாக உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு பதவியேற்ற இந்த 106 நாட்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, தமிழகம் ‘ரிவர்ஸ் கியரில்’ சென்று கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, இந்த குறுகிய காலத்தில் 8 காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்துள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் விஜய் ஒரு ‘சாரி’ (Sorry) கூட சொல்லவில்லை என்றும் சாடினார். மேலும், “உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசு தான்” எனக் கூறி, பெண்களுக்கு எதிரான அட்ராசிட்டிகள் ஆளுங்கட்சியினரால் அதிகரித்து வருவதாக அடுக்கடுக்கான புகார்களைப் பட்டியலிட்டார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாகப் பதிலளிக்காமல், வரும் திங்கள்கிழமை அன்று முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரை வழங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் விஜய், திங்கள்கிழமை நான் அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவாகப் பதில் சொல்கிறேன், ஆனால் அதற்கு முன்பாக எதிர்க்கட்சியினர் யாரும் அவையை விட்டு எழுந்து ஓடிவிடக்கூடாது என ‘பிராமிஸ்’ செய்ய வேண்டும் என்று சவால் விடுத்துவிட்டு அவையிலிருந்து புறப்பட்டார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “இப்போது யார் அவையை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பது இங்குள்ள எல்லாருக்கும் நன்றாகவே தெரியும்” எனக் கூறவே, அவையில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சருக்குக் கடுமையான சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முதலமைச்சருக்கு இன்னும் 3 நாட்கள் அவகாசம் உள்ளது; எனவே நன்றாகத் தயாராகி வாருங்கள்” என்று குறிப்பிட்டார். மேலும், திங்கள்கிழமை பதிலளிக்கும் போது தேவையற்ற குட்டிக்கதைகளைக் கூறாமலும், திசைதிருப்பும் (‘டேக் டைவர்ஷன்’) வேலைகளில் ஈடுபடாமலும், லாஜிக் மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க வேண்டும் என எச்சரித்தார். இதற்கு சபாநாயகர் தரப்பில், “முதலமைச்சர் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார், அவர் தற்போதே தயாராகத் தான் இருக்கிறார்” என விளக்கம் அளிக்கப்பட்டது.
