CRIME
“நான் செத்துட்டா போட்டோவை டெலீட் பண்ணிடுங்க…” ஆசிரியை கொலை செய்வதற்கு முன் இளைஞர் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி… வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூரில் உள்ள சாஹ்புரா கோத்தியில் இயங்கி வரும் ‘சில்ட்ரன் அகாடமி’ பள்ளியில் திங்கள்கிழமை காலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த சவூத் அன்சாரி என்ற நபர், அங்கு ஆசிரியையாகப் பணியாற்றி வந்த நிஷாத் பாத்திமா என்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அதன் பிறகு, அவர் அதே துப்பாக்கியால் தனக்குத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டப்பகலில் பள்ளி வளாகத்திலேயே நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த வழக்கில் ஒரு புதிய திருப்பமாக, குற்றவாளியான சவூத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட பல பழைய மற்றும் புதிய பதிவுகள் வைரலாகி வருகின்றன. சம்பவம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு சவூத் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “எனக்கு திடீரென ஏதேனும் நேரிட்டு நான் இறந்துவிட்டால், சமூக வலைதளங்களில் உள்ள எனது புகைப்படங்களை நீக்கிவிடுங்கள். யாராவது என் மனம் நோகும்படி நடந்து கொண்டாலோ அல்லது நான் யாரையேனும் தெரியாமல் புண்படுத்தியிருந்தாலோ என்னை மன்னித்து விடுங்கள்” என்று பதிவிட்டு, அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், “நான் இனி இல்லை என்று நீங்கள் கேட்கும்போது…” மற்றும் “அவளை மறந்துவிடு…” போன்ற வரிகளுடன் கூடிய சோகமான பின்னணி பாடல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பழைய பதிவுகளும் வைரலாகி வருகின்றன.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், சவூத் இரண்டு துப்பாக்கிகளுடன் முழுத் திட்டமிடலுடன் பள்ளிக்கு வந்தது தெரியவந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியை நிஷாத் பாத்திமாவும், சவூத்தும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், அவர்களுக்கு இடையேயான உறவுமுறை என்ன என்பது குறித்து இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது காவல் துறையினர் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களின் மொபைல் போன்கள், அழைப்பு விவரங்கள் (Call Details), வாட்ஸ்அப் அரட்டைகள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
