LATEST NEWS
திக் திக் நிமிடங்கள்..! நடுவானில் தள்ளாடிய விமானம்.. மயிரிழையில் தப்பிய 200 உயிர்கள்… வைரலாகும் திகில் வீடியோ..!!
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும் போது நிகழ்ந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. ஆம்ஸ்டர்டாமிலிருந்து லண்டன் வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸின் BA431 விமானம், சுமார் 200 பயணிகளுடன் ஹீத்ரோவின் டெர்மினல் 5-ல் தரையிறங்க முயன்றது. அப்போது அங்கு நிலவிய பலத்த காற்று காரணமாக விமானம் காற்றில் ஆடியதுடன், அதன் பின்பகுதி அதாவது வால் பகுதி இரண்டு முறை ரன்வேயில் பலமாக மோதியது. ‘டபுள் டெயில் ஸ்ட்ரைக்’ என்று வர்ணிக்கப்படும் இந்த ஆபத்தான தருணம் அங்குள்ள கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில் விமானி தனது அதீத விழிப்புணர்வை வெளிப்படுத்தி, உடனடியாகத் தரையிறங்கும் முயற்சியை ரத்து செய்து விமானத்தை மீண்டும் வான்நோக்கி வெற்றிகரமாக உயர்த்தினார். வான்வெளியில் ‘கோ அரவுண்ட்’ எனப்படும் இந்த நடைமுறையைப் பின்பற்றிய பின்னர், விமானம் இரண்டாவது முறையாக வானில் ஒரு சுற்று சுற்றி வந்து காலை 10:49 மணியளவில் மிகவும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் எந்தவித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பிக் ஜெட் டிவி நேரலையில் முழுமையாகப் பதிவான இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர் ஆக்சிடென்ட்ஸ் இன்வெஸ்டிகேஷன் பிராஞ்ச் அமைப்பின் விசாரணைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இந்த விமானம் பாதுகாப்பு கருதி அடுத்த இரண்டு நாட்களுக்குப் பறப்பதிலிருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் வீசிய தீவிரமான காற்று காரணமாகவே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
