LATEST NEWS
‘பாஜக’ என்ற பெயரையே சொல்ல தைரியமில்லாதவர் விஜய்..! மத்திய அரசுக்கு அஞ்சும் ‘பயந்தாங்கொளி’ ஆட்சி..! திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி சாடல்..!!
தஞ்சையில் தவெக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “குறுவை சாகுபடி முழுமையாகப் பொய்த்துப் போய் ஆடிப்பெருக்கு தினத்திலும் காவிரி வறண்டு கிடக்கிறது. தவெக அரசு ஒரு நிர்வாகத் திறனற்ற அரசாக உள்ளது. ஆட்சி அமைந்து 3 மாதங்கள் ஆகியும் முதலமைச்சர் வாயில் இருந்து ‘பாஜக’ என்ற வார்த்தை கூட வரவில்லை. மத்திய அரசைப் பகைத்தால் பிரச்சனை வரும் என்ற பயத்தால் பாஜக என்ற பெயரையே உச்சரிக்க தைரியமில்லாத அரசாக தவெக உள்ளது” என்று சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடக முதல்வரைச் சந்திக்கப்போவதாக முதலமைச்சர் விஜய் நாடகமாடுகிறார். அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப்போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியும், தன் கோரிக்கையை முன்வைக்க வந்த தமிழக விவசாயிகளைக் குண்டுக்கட்டாகக் கைது செய்துள்ளது இந்த அரசு. கர்நாடக முதல்வரைப் பார்க்க நினைக்கும் விஜய், பாதிப்புக்குள்ளான தமிழக விவசாயிகளை அழைத்து ஏன் பேசவில்லை? பள்ளிகள் முதல் கழிவறை வரை ரீல்ஸ் எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் இதுபோன்ற ஒரு ரீல்ஸ் அரசை இந்தியாவே இதுவரை கண்டதில்லை” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், “திருட்டு லாட்டரி விற்றவர், திருட்டு விசிடி விற்றவர், பிளாக்கில் டிக்கெட் விற்றவர் என தவெக அரசின் மொத்த கேபினட்டும் ஒரு ஜோக்கர் கூட்டமாகவே அமைந்திருக்கிறது. வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்று பூஜை போடுகிறார்கள்; அமைச்சர்கள் மட்டுமின்றி அவர்களின் சொந்தக்காரர்களும் ஆய்வுக்குச் செல்லும் அளவுக்கு ரீல்ஸ் மோகம் முற்றியுள்ளது. நீர் இல்லாததால் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5 பட்ஜெட் கூட்டத்தொடரிலும், நீதிமன்றம் மற்றும் மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து சட்டப்போராட்டத்தையும் குரலையும் எழுப்பும்” எனத் தெரிவித்தார்.
