LATEST NEWS
மழையாவது… வெள்ளமாவது…! ஜிம்முக்குள் புகுந்த தண்ணீர்..! நெட்டிசன்களை மிரள வைத்த இளைஞர்களின் வெறித்தனம்..!!
சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் எப்போதும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுபவை. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை வியப்பிலும், அதே சமயம் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பலத்த மழை பெய்தால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிவிடுவார்கள் அல்லது ஜிம்மிற்குள் தண்ணீர் புகுந்தால் உடற்பயிற்சி கூடம் மூடப்பட்டுவிடும். ஆனால், இங்கு தலைகீழாக நடந்துள்ளது. கனமழை காரணமாக ஒரு உடற்பயிற்சி கூடத்திற்குள் முழங்கால் அளவிற்கு மழைநீர் புகுந்து தரைப்பகுதியே தெரியாதவாறு வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், அங்கு உடற்பயிற்சி செய்ய வந்த இளைஞர்களின் ஆர்வம் சற்றும் குறையவில்லை. வழுக்கி விழும் பயமோ அல்லது மின்சாரம் தாக்கும் அபாயமோ இல்லாமல், அவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டே எடைகளை தூக்கி தீவிரமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். தண்ணீரின் சலசலப்பு சத்தத்திற்கு இடையே சிலர் பெஞ்ச் பிரஸ் மற்றும் டெட்லிஃப்ட் பயிற்சிகளை செய்கின்றனர். சுற்றிலும் உள்ள டிரெட்மில் மற்றும் உடற்பயிற்சி சைக்கிள்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தாலும், எதற்கும் அசராமல் இளைஞர்கள் தங்கள் பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர்.
எக்ஸ் தளத்தில் ‘@Truecircle7’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது மற்ற சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “உடற்பயிற்சி மீதான இவர்களின் அர்ப்பணிப்புக்கு அளவே இல்லை” என்றும், “சாக்குப்போக்கு சொல்லாமல் கடமையைச் செய்பவர்கள்” என்றும் பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர், “மழைக்காலத்தில் கார்டியோ மற்றும் வெயிட் டிரெய்னிங் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்கிறார்கள்” என வேடிக்கையாகவும், “இதைப் பார்க்கும் ஜிம் உரிமையாளரின் நிலைமை என்னவாக இருக்கும்?” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
