LATEST NEWS
செம்ம ஷாக்…! என்ஜினீயர்களுக்கே டஃப் கொடுக்கும் எலக்ட்ரீசியன்கள்… AI புரட்சியால் மாசம் ரூ.22 லட்சம் அள்ளும் கைத்தொழில் காரர்கள்..!!
செயற்கை நுண்ணறிவு என்றாலே கம்ப்யூட்டர் துறையில் படித்தவர்களுக்கும், என்ஜினீயர்களுக்கும்தான் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று பொதுவாக நினைக்கிறோம். ஆனால், நிலைமை அப்படியல்ல. செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சியால் எலக்ட்ரீசியன்கள், பிட்டர்கள், வெல்டர்கள், தச்சர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கும் இப்போது அதிக தேவை ஏற்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கான தரவு மையங்களில் உள்ள கணினி சாதனங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. ஒரு சாதனத் தொகுப்பு 120 முதல் 140 கிலோவாட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 10 மடங்கு அதிகம். இதனால் தரவு மையங்களுக்கு புதிய மின்சார துணை நிலையங்கள், உயர் மின்னழுத்த இணைப்புகள், தடையில்லா மின்சார அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்க வேண்டியுள்ளதால், பயிற்சி பெற்ற எலக்ட்ரீசியன்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது.
தரவு மையங்களில் பணிபுரியும் சராசரி தொழிலாளர்களின் சராசரி மணிநேர ஊதியம், வழக்கமான கட்டுமானப் பணியாளர்களைவிட 42 சதவீதம் அதிகம். சில பணியாளர்களுக்கு வழக்கமான ஊதியத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு 10 டாலருக்கும் அதிகமாக (ரூ.950-க்கும் மேல்) கிடைக்கிறது. சிறப்பு திறன் பெற்ற எலக்ட்ரீசியன்கள் மற்றும் கட்டுமான மேற்பார்வையாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுவதன் மூலம் ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் வரை சம்பாதிக்கின்றனர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியே 66 லட்சம் ஆகும். அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.22 லட்சத்து 16 ஆயிரம் ஆகும். இது சராசரியாக ஒரு ஏ.ஐ. என்ஜினீயர் பெறும் சம்பளத்தை விட அதிகம்.
மெட்டா, பிளாக்ராக், கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களும் மின்சாரப் பணியாளர்களுக்கான பயிற்சி திட்டங்களுக்கு நிதி வழங்கி வருகின்றன. தரவு மையங்களுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தொழிலாளர்கள் அதிக அளவில் செல்வதால், வீடு கட்டுதல், மருத்துவமனை கட்டுமானம், மின்சார வலையமைப்பு சீரமைப்பு உள்ளிட்ட பிற துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்சார கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஏற்ப, 2030-ம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான கூடுதல் எலக்ட்ரீசியன்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே பிட்டர்கள், வெல்டர்கள், தச்சர்கள் உள்ளிட்ட கைத்தொழில் தெரிந்த தொழிலாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
