LATEST NEWS
“தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..” மின்வாரியத்தில் 8,000 அரசு வேலைகள்..! உடனே செக் பண்ணுங்க..!!
தமிழகத்தில் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிரப்பத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை அக்டோபர் 28ஆம் தேதி எரிசக்தித் துறை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமன முறையில் இரு கட்டங்களாக நிரப்பப்பட உள்ளன. அதன்படி, 2027ஆம் ஆண்டில் முதற்கட்டமாக 5,000 பணியிடங்களும், 2028ஆம் ஆண்டில் மீதமுள்ள 3,000 பணியிடங்களும் நிரப்பப்படும். மின்வாரியத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறையைக் குறைக்கவும், மின்சாரப் பராமரிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்வாரியத்தில் கள உதவியாளர்கள் மின்சார விநியோகப் பணிகளிலும், மின்கம்பிகள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பப் பணிகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தற்போது கடும் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால், பணியில் உள்ள ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதுடன், மின்தடையைச் சரிசெய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. புதிய நியமனங்கள் மூலம் இச்சிக்கல்களுக்குத் தீர்வு காண அரசு திட்டமிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் கள உதவியாளர்களுக்கு ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் ஓய்வூதியப் பங்களிப்பு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்து, ஒரு பணியாளருக்கு மாதத்திற்குச் சுமார் ரூ.35,548 என அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பிற்காக அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.341.26 கோடி நிதிச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது அரசின் ஒப்புதல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தேர்வுக்கான விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் தேதிகள் போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, போட்டித்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் வதந்திகளை நம்பாமல், TNPSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த 8,000 கள உதவியாளர்கள் நியமனத் திட்டம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொதுமக்களுக்குக் கிடைக்கும் மின்சார விநியோகச் சேவையையும் கணிசமாக மேம்படுத்தும்.
