CRIME
“மதுவில் கலந்த பூச்சிக்கொல்லி மருந்து..!” கள்ளத்தளனுடன் மனைவி போட்ட பக்கா பிளான்.. நள்ளிரவில் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி, அந்தப் பழியைத் தற்கொலை என நாடகமாடி மறைக்க முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் தெலுங்கானா மாநிலம் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண்டாலா சம்பத் (32) என்ற பிளம்பருக்கும், சுமலதா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பத் தனது மாமனார் வீட்டிலேயே தங்கி வேலை செய்து வந்த நிலையில், சுமலதாவிற்கு புட்டாரம் கிராமத்தைச் சேர்ந்த உம்மலா ஸ்ரீகாந்த் என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
தங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த சுமலதா, தனது கள்ளக்காதலன் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து ஒரு கொடூரமான கொலைத் திட்டத்தைத் தீட்டினார். இதற்காக தருண் என்ற நபருக்கு ரூ.1 லட்சம் பணம் கொடுத்து இந்த சதியில் இணைத்துக் கொண்டனர். திட்டமிட்டபடி, கடந்த 17-ஆம் தேதி ஸ்ரீகாந்தும் தருணும் சேர்ந்து சம்பத்தை மது அருந்த வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு பூச்சிக்கொல்லி மருந்து கலந்த மதுவைக் கொடுத்துக் கொன்றுவிட்டு, அவரது உடலை நள்ளிரவில் பைக் மூலமாக வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
கணவனின் உடல் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை விசிறி அடித்த சுமலதா, அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி எல்லோரையும் நம்ப வைத்துள்ளார். ஆரம்பத்தில் காவல்துறையினரும் இதனை தற்கொலை வழக்காகப் பதிவு செய்து பிரேதப் பரிசோதனையை முடித்தனர். ஆனால், சம்பத்தின் தாயார் தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளித்ததால், போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதில் பயந்துபோன சுமலதாவும் ஸ்ரீகாந்தும் கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
