LATEST NEWS
நோ கோச்சிங் சென்டர்… ஒன்லி ஸ்கூல் டீச்சர்ஸ்..! நீட்டில் 437 மதிப்பெண் தட்டிய அரசுப் பள்ளி மாணவி அன்பரசியின் சாதனை..!!
நிழல் தரும் தடைகளையும் தாண்டி, தன் கடின உழைப்பால் மருத்துவக் கனவை நனவாக்கியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி அன்பரசி. திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 517 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். அதைத் தொடர்ந்து, எவ்வித தனியார் பயிற்சி மையங்களின் தயவுமின்றி, தன் பள்ளி ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தீவிரமாகப் படித்து நீட் தேர்வில் 437 மதிப்பெண்கள் குவித்தார். இதன்மூலம் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இச்சாதனைக்கு பின்னே அன்பரசியின் கண்ணீரும் போராட்டமும் நிறைந்த கதையொன்று உள்ளது. இதய நோயால் தந்தை மறைந்த பிறகு, குடும்ப பாரத்தை அன்பரசியின் தாயார் பானிப்பூரி கடை நடத்தித் தாங்கிப் பிடித்துள்ளார். தினமும் பள்ளி நேரம் முடிந்ததும், தாயின் கடையிலும் வியாபாரத்திற்கு உதவி செய்துவிட்டே அன்பரசி வீட்டிற்குத் திரும்புவார். பின்னர் இரவு நேரங்களில் விழித்திருந்து படித்து இந்த அபார சாதனையைப் படைத்துள்ளார். “எதிர்காலத்தில் சிறந்த மருத்துவராகி, ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த செலவிலும் இலவசமாகவும் மருத்துவச் சேவை அளிப்பதே எனது வாழ்வின் முதன்மை லட்சியம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் அன்பரசி.
அன்பரசியின் மன உறுதியையும் சாதனையையும் பாராட்டி, சமூக சேவகர்களான நாராயணசாமி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அவரை நேரில் கௌரவித்தனர். அத்துடன் அவருக்கு மருத்துவக் கோட் (Doctor Coat), ஸ்டெதஸ்கோப் மற்றும் முதலாமாண்டு மருத்துவப் புத்தகங்களை பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தினர். மேலும், அன்பரசியின் உயர்கல்விக் கனவுக்குத் தடையின்றி முழு மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிதியுதவிகளையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் உறுதியளித்துள்ளது.
