LATEST NEWS
வேற லெவல் பிசினஸ் பாஸ்..! முதுகு சொரிஞ்சா மாசம் 14 லட்சம்… சீன வாலிபரின் விசித்திர பிசினஸ்.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்..!
சீனாவைச் சேர்ந்த 32 வயதான ஜாங் சியாவோகியாவோ என்ற இளைஞர், முதுகு சொரிந்து விடும் எளிய செயலை ஒரு பிரத்யேக வணிகமாக மாற்றி உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். சீன ஊடகங்களின்படி, ஷென்சென் நகரில் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இரு கிளைகளைத் தொடங்கி இந்த விசித்திரமான சேவையை வழங்கி வருகிறார். இந்த மையங்களில் ஒரு மணி நேர சேவைக்கு 300 யுவான், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர் மாதம் ரூ.14 லட்சம் வரை வருமானம் ஈட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளத்தில் ஒரு பெண் தனது கணவருக்கு அன்போடு முதுகு சொரிந்து விடுவதையும், அதற்குக் கீழே நெட்டிசன்கள் “இப்படிச் செய்ய ஒரு ஆள் இருந்தால் நான் காசு கொடுக்கக்கூடத் தயார்” எனப் பதிவிட்டிருந்த கமெண்ட்டுகளையும் பார்த்தபோதுதான் ஜாங்கிற்கு இந்த அசாத்தியமான தொழில் யோசனை வந்துள்ளது. மேலும், சிறுவயதில் தனது தந்தை முதுகு சொரிந்து விட்டவுடன் தமக்கு நன்றாகத் தூக்கம் வந்த நினைவும் இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இந்தச் சேவைக்காக அவர் நகங்கள் போன்ற வடிவமுடைய பிரத்யேகக் கருவிகளை வடிவமைத்து, தோலில் காயம் ஏற்படாமல் இதமான அழுத்தத்துடன் சொரிந்து விடுவதற்கானப் பயிற்சிகளையும் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார்
இந்த மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் படுக்கையில் குப்புறப் படுத்துக்கொள்ள, ஊழியர்கள் அவர்களின் உடல் முழுவதும் மென்மையாகச் சொரிந்து விடுகின்றனர். மசாஜ் நிலையங்களைப் போலச் செயல்படும் இந்தச் சேவை, தங்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலை ரிலாக்ஸ் செய்வதாகவும், நிம்மதியான தூக்கத்தைத் தருவதாகவும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையிலும், தனது விசித்திரமான இத்தொழிலை நாடு முழுவதும் 100 கிளைகளாக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஜாங் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
