LATEST NEWS
400 ஆண்டுகால சென்டிமென்ட் உடையுமா..? புனித ஜார்ஜ் கோட்டையை விட்டு வெளியேறும் தமிழக அரசு..? முதலமைச்சர் விஜயின் வியூகம்..!
தமிழ்நாட்டில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நவீன கட்டடமானது 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த பொது நிர்வாக உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன், அடுத்த 100 ஆண்டுகாலத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தின் சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்த வரலாற்றுத் தளம் 1640-1664 காலகட்டத்தில் (குறிப்பாக 1644 இல்) கட்டி முடிக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகாலப் பாரம்பரிய நினைவுச் சின்னமாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டே முதன்மை நிர்வாகத் தலைநகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இத்தகைய பாரம்பரிய அந்தஸ்து மற்றும் இடநெருக்கடி காரணமாக தற்போதைய வளாகத்தை மேலும் விரிவுபடுத்தவோ அல்லது தரம் உயர்த்தவோ இயலாத சூழல் நிலவுகிறது.
எனவே, அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து, சிறந்த நிர்வாகத்தை வழங்கும் நோக்கில் இந்த புதிய தலைமைச் செயலகம் அமையவுள்ளது. தற்போதைய தகவல்களின்படி, அனைத்து வசதிகளுடன் சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த புதிய வளாகம் கட்டப்பட்டாலும், தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை அதன் பாரம்பரியத் தன்மை மாறாமல் அப்படியே பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
