LATEST NEWS
கனத்த இதயத்தோடு வெளியேறுகிறேன்..” திமுக தலைமைக்கு பேரதிர்ச்சி கொடுத்த வி.ஜெயன்…! தவெகவில் இணையப் போகிறாரா..?!
திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க. மாநில நிர்வாகி வி.ஜெயன் தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 35 ஆண்டுகளாக தான் இணைந்து பயணித்து வந்த தி.மு.க.வில் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் கனத்த இதயத்துடனும், மிகுந்த மன வருத்தத்துடனும் விலகி கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தனை ஆண்டுகளாக தனக்கு கட்சிப்பணியாற்றும் வாய்ப்பினை வழங்கிய கட்சியின் தலைவருக்கும், துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னுடன் இணைந்து பணியாற்றிய தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியினையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வில் முக்கிய நிர்வாகியாகச் செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தி.மு.க.விலிருந்து தனது விலகலை அறிவித்துள்ள ஜெயன், த.வெ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
