LATEST NEWS
இப்படித்தான் அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்களா.? அமைச்சர் ராஜினாமா… நட்சத்திர ஹோட்டலில் ‘கொண்டாட்ட’ டான்ஸ்.. CJP-யை வெளுத்து வாங்கிய பாஜக..!!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஹோட்டல் ஒன்றில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு இந்த அமைப்பினர் இப்படித்தான் தங்களது அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த அமைப்பின் இரட்டை வேடத்தையும், வெட்கமற்ற தனத்தையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் பாஜக எம்பி மகேஷ் ஜெத்மலானியும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, டெல்லியில் இத்தனை நாட்கள் வன்முறை நடந்த பிறகு, இந்த இளைஞர் ஆர்வலர்கள் நட்சத்திர ஹோட்டலில் இசையமைத்து நடனமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு, இத்தனை நாட்களாக டெல்லியைப் பதற்றத்தில் வைத்திருந்த இந்தப் போராட்டத்திற்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடம் மற்றும் தளவாடங்களுக்கான நிதி எங்கிருந்து வந்தது? இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
பாஜகவின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரப் தாஸ், தற்போதைய ஜென் ஜி தலைமுறையினரின் அணுகுமுறையை அரசோ அல்லது ஊடகங்களோ இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். “நாங்கள் சாலையில் அமர்ந்தும் போராடுவோம், அதே சமயம் நடனமாடிக்கொண்டே எங்களது எதிர்ப்பையும் காட்டுவோம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், முந்தைய தலைமுறையினர் நினைப்பது போலப் போராட்டங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைப் பெரியவர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்றும் அவர் சாடியுள்ளார்.
