LATEST NEWS
“உங்க அப்பா வீட்டிலிருந்தா வருது..?” எத்தனால் எதிர்ப்பாளர்களை கிழித்து தொங்கவிட்ட பாஜக எம்.பி… சர்ச்சையை கிளப்பிய ஜனார்த்தன் மிஸ்ரா பேச்சு..!!
இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் எத்தனால் கொள்கையை ஆதரித்து ரேவா தொகுதி பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா மிகக் காட்டமாகப் பேசியுள்ளார். ரேவாவில் இருந்து போபால் மற்றும் கொல்கத்தாவிற்குப் புதிய விமான சேவைகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், எத்தனால் கலப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நோக்கி, “தூய பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வருகிறது?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தற்போதைய எரிபொருள் தேவையைச் சுட்டிக்காட்டிப் பேசிய எம்.பி. மிஸ்ரா, நாடு தனது கச்சா எண்ணெய் தேவையில் வெறும் 20 சதவீதத்தை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்வதாகவும், மீதமுள்ள 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே, எண்ணெய் விநியோகத்திற்காகக் கப்பல்கள் சுமார் 18,000 கிலோமீட்டர்கள் கூடுதல் தூரம் சுற்றிப் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய இக்கட்டான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது குறித்துப் பேசும்போது, சிலர் அதற்குத் தேவையற்ற எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவில் உள்ள வாகனங்கள் எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கக்கூடிய திறன் கொண்டவைதான் என்று தெரிவித்த மிஸ்ரா, பிரேசிலில் வாகனங்கள் 100 சதவீத எத்தனாலில் சிறப்பாக இயங்குவதையும், நிபுணர்களின் கருத்துப்படி எத்தனால் என்ஜின்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையும் உதாரணங்களாக முன்வைத்தார்.
எப்போதும் தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் செய்திகளில் இடம்பெறும் ஜனார்தன் மிஸ்ரா, இந்தியாவிலும் எத்தனால் குறித்துத் தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அதிருப்தி வெளியிட்டார். அதேவேளையில், தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில், உலகிலேயே பணவீக்கம் மிகக் குறைவாகவும் வேலைவாய்ப்பு மிக அதிகமாகவும் உள்ள ஒரு இடம் இருக்கிறது என்றால், அது இந்தியாதான் என்றும் அவர் தனது உரையின் நிறைவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார்.
