LATEST NEWS
2 வயசு குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் ரூ.1.5 லட்சமா..? கல்வி என்ற பெயரில் நடக்கும் வியாபாரம்.. வைரலாகும் தந்தையின் குமுறல் வீடியோ..!!
இந்தியாவில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 2 வயதுக் குழந்தையின் மழலையர் பள்ளி சேர்க்கைக்காக ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கேட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி என்ற பெயரில் நடக்கும் இந்த பகிரங்கச் சுரண்டல் நடுத்தர வர்க்கப் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரிதேஷ் லக்கானி என்பவர் தனது 2 வயது மகளை ஒரு புகழ்பெற்ற மழலையர் பள்ளியில் சேர்க்க முயன்றார். அப்போது அந்தப் பள்ளி நிர்வாகம் ரூ.1.5 லட்சம் கட்டாய நன்கொடை கோரியுள்ளது. இந்தத் தொகையைத் தர மறுத்தால், குழந்தைக்கு நுழைவுத் தேர்வு நடத்தி அதில் ‘தோல்வி’ அடையச் செய்துவிட்டு, அதைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் எனப் பள்ளி நிர்வாகம் மறைமுகமாக மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கொடுமை குறித்து பிரிதேஷ் லக்கானி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஆதங்கத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குழந்தைகள் விளையாடி மகிழ வேண்டிய 2 வயதில், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தகுதிப் பட்டியல் தயாரிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும், ஆரம்பப் பள்ளிப் படிப்பு இந்த அளவுக்கு விலை உயர்ந்ததாக இருக்கக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்தியாவில் கல்வி என்பது சேவைத் துறையிலிருந்து மாறி, முழுக்க முழுக்க ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், தனியார் பள்ளிகளின் இத்தகைய சட்டவிரோதக் கட்டணக் கொள்ளையைத் தடுக்க அரசு உடனடியாகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
