CRIME
“எங்கள் மனைவிகளை காணோம்..” போலீஸையே ஏமாற்ற நினைத்த கொடூர சகோதரர்கள்.. 5 வயதுக் குழந்தை கொடுத்த அந்த ஒரு சாட்சியத்தால் அம்பலமான இரட்டைக் கொலை.. திடுக்கிடும் பின்னணி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில், சகோதரர்கள் இருவர் தங்களது மனைவிகளைக் கொடூரமாகக் கொலை செய்து வனப்பகுதியில் புதைத்துவிட்டு, பின்னர் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் நாடகமாடிய கொடூரச் சம்பவம், 5 வயதுச் சிறுவன் அளித்த சாட்சியத்தால் அம்பலமாகியுள்ளது.
கும்லா பகுதியைச் சேர்ந்த சிவ்சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹு ஆகிய சகோதரர்களுக்கு, மினி பிரியா (28) மற்றும் ராதிகா குமாரி (20) ஆகியோருடன் திருமணமாகியிருந்தது. குடும்பத் தகராறு காரணமாகக் கணவர்களைப் பிரிந்து தாய்வீட்டிற்குச் சென்றிருந்த இரண்டு பெண்களையும், சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சகோதரர்கள் இருவரும் மீண்டும் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால், வீட்டிற்கு வந்த பிறகும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், சகோதரர்கள் இருவரும் சேர்ந்து முதலில் மினி பிரியாவைத் தாக்கியுள்ளனர்;
அப்போது அவரைக் காப்பாற்ற வந்த ராதிகா குமாரியையும் சேர்த்து இருவரையும் கொடூரமாகக் கொலை செய்து, சடலங்களை அருகிலுள்ள பிரு வனப்பகுதியில் குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதனையடுத்து, யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகச் சகோதரர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை காவல் நிலையத்திற்குச் சென்று தங்களது மனைவிகளைக் காணவில்லை எனப் புகார் அளித்து நாடகமாடியுள்ளனர்.
ஆனால், வீட்டிலிருந்த 5 வயதுச் சிறுவன் காவல்துறையினரிடம் நடந்த உண்மைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியதால், சகோதரர்கள் மீது போலீஸாருக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சகோதரர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வனப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களின் உடல்களும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
