CRIME
“எங்கே இருக்கிறாய்..?” போனில் கேட்ட ஒற்றைக் கேள்வி.. மேட்ரிமோனி ஆபீஸுக்குள் புகுந்த கணவன்.. அடுத்த நொடியே காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூர கதி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கீர்த்திகா (30). இவரும் வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஹரிபிரசாத்தும் காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாகக் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் கீர்த்திகாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்திகா, அரைப்பாக்கத்தில் உள்ள தனது தாய் விஜயாவின் வீட்டிற்குச் சென்று தங்கினார்.
மகளை வீட்டில் தனியாக விட்டால் மருமகன் ஏதேனும் அசம்பாவிதம் செய்துவிடுவார் எனப் பயந்த தாய் விஜயா, தான் வேலை செய்யும் சத்துவாச்சாரி பேஸ்-2 பகுதியில் உள்ள மேட்ரிமோனி அலுவலகத்திற்குக் கீர்த்திகாவை அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் கீர்த்திகாவிற்குப் போன் செய்த ஹரிபிரசாத், அவர் எங்கே இருக்கிறார் என விசாரித்துள்ளார். தான் தாயின் அலுவலகத்தில் இருப்பதாகக் கீர்த்திகா கூறியதை அடுத்து, ஆத்திரமடைந்த ஹரிபிரசாத் பட்டாக் கத்தியுடன் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
அங்குக் கீர்த்திகாவைச் சரமாரியாக வெட்டியதில், அவரது இரண்டு கை மணிக்கட்டுகளும் துண்டாகி, கழுத்து மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற தாய் விஜயாவையும் ஹரிபிரசாத் கத்தியால் வெட்டியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர், கொலைக்குப் பயன்படுத்திய பட்டாக் கத்தியுடன் தனது இருசக்கர வாகனத்தில் சர்வ சாதாரணமாகச் சென்ற ஹரிபிரசாத், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவல்துறையினர், கீர்த்திகாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் அலுவலகத்திற்குள் புகுந்து காதல் மனைவியைக் கணவனே வெட்டிக் கொலை செய்த இச்சம்பவம் சத்துவாச்சாரி பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
