“ஆன்லைன் சூதாட்டம் அல்ல…” மாணவர் தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் உருக்கமான காரணம்.. உண்மையை உடைத்த எஸ்.பி…!! – cinefeeds
Connect with us

CRIME

“ஆன்லைன் சூதாட்டம் அல்ல…” மாணவர் தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் உருக்கமான காரணம்.. உண்மையை உடைத்த எஸ்.பி…!!

Published

on

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பசார் ஆர்.ஜி.யு.கே.டி பல்கலைக்கழக மாணவர் சம்பத் குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது தாய்க்குத் தங்க நகை வாங்கித் தர ஆசைப்பட்டு சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி அவர் உயிரிழந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜானகி ஷர்மிளா விளக்கமளித்துள்ளார். மாணவர் சம்பத் குமாரின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. ஜானகி ஷர்மிளா, ஆன்லைன் சூதாட்டத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், தனது தாய்க்குத் தங்க நகை வாங்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில், சம்பத் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு முதலீட்டுச் செயலியில் பணத்தை முதலீடு செய்தது தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் அந்த நகைத் திட்டம் மூலம் அவருக்கு மாதம் ரூ.5,000 லாபம் கிடைத்துள்ளது. இதனைக் கவனித்த சைபர் குற்றவாளிகள், டெலிகிராம் செயலி மூலமாகச் சம்பத்தைத் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் கூறித் தங்களது வலையில் வீழ்த்தியுள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என நம்பிய சம்பத், தனது குடும்ப உறுப்பினர்களிடம் கடன் வாங்கிய பணத்தையும் அந்தச் செயலியில் முதலீடு செய்துள்ளார். ஆனால், திடீரென அந்த முதலீட்டுச் செயலி முடக்கப்பட்டு மொத்தப் பணமும் பறிபோனதால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

Advertisement

தனது பணத்தையும், குடும்பத்தாரிடம் வாங்கிய கடனையும் இழந்த விரக்தியில் விடுதி அறையில் சம்பத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சம்பத்தின் மரணத்திற்கும் அவரது நண்பர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள எஸ்.பி. ஜானகி ஷர்மிளா, இது தொடர்பாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in