CRIME
“அந்த தொழிலுக்கு போக சொல்லி” மறுத்தால் அறையில் பூட்டி பட்டினி… கொலை மிரட்டல்.. சொந்த மகளையே ஹோட்டல்களுக்கு விற்ற கொடூரப் பெற்றோர்.. கதறிய மைனர் சிறுமி..!!
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் உள்ள இஸ்லாம்நகரைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர், தனது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை ஆகியோர் தன்னைக் கட்டாயப்படுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகக் காவல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான புகார் அளித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்தத் தந்தை உயிரிழந்த நிலையில், தாய் வேறொரு நபருடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து தன்னை நகரின் பல்வேறு ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதாகவும் அந்தச் சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தாயும் வளர்ப்புத் தந்தையும் செய்யும் இந்தக் கொடூரச் செயலுக்குத் தான் எதிர்ப்புத் தெரிவித்தால், தன்னைக் கடுமையாகத் தாக்குவதுடன், அறையில் பூட்டி வைத்து உணவளிக்காமல் பட்டினி போடுவதாகவும் சிறுமி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் தொழிலுக்குச் சம்மதிக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும், பொய் வழக்குகளில் சிக்க வைத்துவிடுவதாகவும் மிரட்டுவதாகக் கூறியுள்ள அந்தச் சிறுமி, முசாபர்நகரில் ஒரு நபருக்கு எதிராகத் தன்னை மிரட்டிப் பொய் வழக்குப் பதிவு செய்ய வைத்ததாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெற்றோரின் இந்தத் தொடர் சித்ரவதையால் நிலைகுலைந்து போன அந்த மைனர் சிறுமி, இன்று (நவம்பர் 25) வீட்டிலிருந்து தப்பித்து ரூர்க்கி கோட்வாலி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, தனது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். சிறுமியின் இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
