CRIME
“பாட்டியைக் கொன்றதைப் பார்த்துவிட்ட 8 வயதுப் பேரன்…” சாட்சியை அழிக்க அரங்கேறிய இரட்டைக் கொலை… 11 நாட்களுக்குப் பிறகு சிக்கிய கொடூரன்.. அதிர்ச்சி பின்னணி..!!
டெல்லியில் தனது மகன்களுடன் வசித்து வந்த 45 வயதான நியாஸ் பானோ, சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது 8 வயதுப் பேரன் அஃப்னானுடன் சொந்த கிராமத்திற்குத் திரும்பியிருந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் 13-ஆம் தேதி இரவு நியாஸ் பானோ வீட்டில் இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த அறிமுகமான நபரான ஆஸிம் என்பவர் தவறான நோக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஸிம் நடந்துகொண்டபோது, நியாஸ் பானோ அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெண்ணின் எதிர்ப்பினால் ஆத்திரமடைந்த ஆஸிம், நியாஸ் பானோவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த 8 வயதுச் சிறுவன் அஃப்னான் தனது பாட்டி கொல்லப்படுவதைப் பார்த்துவிட்டான். இதனால் உண்மை வெளியே தெரிந்துவிடும் என அஞ்சிய ஆஸிம், அந்தப் பிஞ்சுச் சிறுவனையும் ஈவிரக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இருவரது உடல்களையும் படுக்கையில் கிடத்தி போர்வையால் மூடிவிட்டு, அங்கிருந்து தப்பித்து டெல்லிக்குச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
ஒரே வீட்டில் பாட்டியும் பேரனும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளியைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் தடயங்களின் அடிப்படையில் ஆஸிம் மீது சந்தேகம் வலுத்தது. விசாரணையின்போது, நியாஸ் பானோ தனது மைத்துனரின் மனைவி என்றும், அவருடன் ஏற்கெனவே நெருக்கமான உறவு இருந்ததாகவும், தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சினைகள் இருந்ததாகவும் ஆஸிம் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கொலை நடந்து 11 நாட்களுக்குப் பின்னர் நவம்பர் 24-ஆம் தேதி ஆஸிமை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை மிகத் திறம்பட விசாரித்து குற்றவாளியைக் குறுகிய காலத்தில் கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் எதிர்ப்பை வன்முறையால் அடக்கியதுடன், எதையும் அறியாத சிறுவனின் உயிரையும் பறித்த இச்சம்பவம் சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
