CRIME
“அவரை ஜாமீனில் எடுக்க முடியல” 7 மாதப் பச்சிளம் குழந்தையை வாசலில் விட்டுவிட்டு… மனைவி தீக்குளித்து தற்கொ**.. திருமணமாகி 2 வருஷத்தில் அதிர்ச்சி..!!!
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம் 2-வது தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் (எ) கருப்பு (வயது 22) மற்றும் திவ்யா (வயது 19) ஆகியோர் காதலித்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில், தாளமுத்துநகரில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டு, கடந்த 7 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கணவரை ஜாமீனில் வெளியில் எடுக்க திவ்யா பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்காததால், அவர் கடும் மனவேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாமியார் நாகம்மாள் வீட்டில் இருந்த திவ்யா, தனது 7 மாத ஆண் குழந்தையை வீட்டு வாசலில் வைத்துவிட்டு உள்ளே சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். பின்னர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டதில், தீ உடல் முழுவதும் பரவி திவ்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன், திவ்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்தார். திவ்யாவுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள்ளேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சுனில் மற்றும் தூத்துக்குடி சார் ஆட்சியர் ஆகியோர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
