CRIME
“என் 6 வயது மகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்…” கணவர், மாமியார் கொடுத்த சித்ரவதை.. 90% தீக்காயங்களுடன் இளம்பெண் அளித்த உருக்கமான மரண வாக்குமூலம்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அளித்த மன உளைச்சல் காரணமாக இளம்பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேடபாளையத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தறித்தொழில் செய்து வரும் இந்தத் தம்பதியினருக்கு சன்விகா என்ற 6 வயது பெண் குழந்தை உள்ளது.
தினேஷ் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி நிர்மலாவின் நடத்தையில் சந்தேகப்பட்டுத் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நவம்பர் 22-ஆம் தேதி வழக்கம்போல் தினேஷ், அவரது தாய் சாந்தாமணி மற்றும் தம்பி கார்த்தி ஆகியோர் சேர்ந்து நிர்மலாவைத் திட்டியதுடன் உடல் ரீதியாகவும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா, கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே தறிக்கூடத்தில் இருந்த மண்ணெண்ணெயைத் தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டுள்ளார்.
உடல் முழுவதும் தீ பரவியதைக் கண்ட தினேஷ், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து நிர்மலாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். தற்போது 90 சதவீத தீக்காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து மருத்துவமனைக்குச் சென்ற பல்லடம் போலீசார், உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிர்மலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அந்த உருக்கமான வாக்குமூலத்தில், தனது இந்த விபரீத முடிவுக்குக் கணவர் தினேஷ், மாமியார் சாந்தாமணி மற்றும் கணவரின் தம்பி கார்த்தி ஆகியோரே காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் நிர்மலா தெரிவித்துள்ளார். மேலும், தனது 6 வயது மகள் சன்விகாவைத் தனது தாய் வீட்டாரிடம் ஒப்படைத்துப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
