CRIME
இரவு முழுவதும் ஹோட்டலில் சித்ரவதை… உயிர் தப்பிக்க ஓடிய இளம்பெண்ணை நடுரோட்டில்… தலைமுடியைப் பிடித்துத் தாக்கிய முன்னாள் காதலன்… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ‘ஸ்கொயர்’ என்ற தனியார் ஹோட்டலில், காசியாபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது முன்னாள் காதலன் சல்மான் என்பவர் இரவு முழுவதும் அறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இவர்கள் இருவரும் கூட்டாகத் தொழில் தொடங்கி நஷ்டமடைந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சல்மானுடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். இந்நிலையில், தோழியைச் சந்திக்க வந்த அந்தப் பெண்ணை ஹோட்டல் மேலாளரான கிருஷ்ணா என்பவரின் உதவியுடன் வரவழைத்த சல்மான், அவரைத் தனி அறையில் பூட்டி வைத்து இரவு முழுவதும் சித்ரவதை செய்துள்ளார்.
மறுநாள் மதியம் சல்மானின் பிடியிலிருந்து தப்பிய அந்த இளம்பெண், உயிர் தப்பிக்க ஆபுலேன் சந்தைப் பகுதிக்கு ஓடியுள்ளார். ஆனால், அவரைப் பின்தொடர்ந்து வந்த சல்மான், பட்டப்பகலில் நடுரோட்டில் அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்துக் கீழே தள்ளிச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், இளம்பெண்ணை மீட்டதோடு சல்மானுக்குத் தர்ம அடி கொடுத்தனர். எனினும், பொதுமக்களின் பிடியிலிருந்து நழுவிய சல்மான், ஹோட்டலின் மொட்டை மாடி வழியாகக் குதித்துத் தப்பியோடியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்து அமைப்பினர் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு முன்பு திரண்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான பதிவேடுகள் இன்றி அறைகள் ஒதுக்கப்பட்ட அந்த ஹோட்டலைச் சீல் வைக்க வேண்டும் என்றும், தப்பியோடிய சல்மான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவான சல்மானைப் பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
