CRIME
“4 மாதங்களில் 8 பேருக்கு விஷம் வைத்துக் கொலை…” இறுதிச் சடங்கிலும் பங்கேற்று ஆறுதல் கூறிய கொடூரன்.. சீரியல் கில்லரின் பகீர் வாக்குமூலம்..!!
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராம் சஹாய் ஜெய்ஸ்வால் என்பவர், கடந்த நான்கு மாதங்களில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எலிகளைக் கொல்வதற்காக எனக் கூறி கடைகளில் போராக்ஸ் எனும் விஷப் பொருளை வாங்கிய அவர், முதலில் அதனை ஒரு நாய்க்குக் கொடுத்து அதன் வீரியத்தைச் சோதனை செய்துள்ளார். அதன் பின்னர், பழைய முன்விரோதம், தகாத வார்த்தைகளால் திட்டியது, நிலத்தகராறு, மனைவி மீதான சந்தேகம், சூனியம் வைத்ததாக எழுந்த சந்தேகம் மற்றும் கடன் பிரச்சினை போன்ற மிகச் சாதாரண காரணங்களுக்காகத் தனது கிராம மக்களையே குறிவைத்துத் தீர்த்துக்கட்டத் தொடங்கியுள்ளார்.
தனது இலக்காகத் தேர்ந்தெடுக்கும் நபர்களை மது அருந்த வருமாறு ஆசைவார்த்தை கூறி அழைக்கும் ராம் சஹாய், அவர்களின் மதுவில் போராக்ஸ் விஷத்தைக் கலந்து கொடுத்துக் கொலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், தான் விஷம் வைத்துக் கொன்ற ஒவ்வொருவரின் இறுதிச் சடங்கிலும் எந்தச் சந்தேகமும் வராத வகையில் நேரில் பங்கேற்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் நாடகமாடியுள்ளார்.
ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினருக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியபோது, உயிரிழந்த ஒவ்வொரு நபருடனும் கடைசியாக இருந்த நபர் ராம் சஹாய் ஜெய்ஸ்வால் என்பது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரைப் பிடித்து காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, 8 பேரையும் விஷம் வைத்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
