CRIME
“நான் விரும்பும் ஆடை அணிந்து வா… என்னைத் தூங்க வை..!” பள்ளி கணினி ஆய்வகத்திற்குள் ‘ரகசிய அறை’.. மாணவிகளைத் தனியாக அழைத்துச் சென்ற ஆசிரியரின் அதிர்ச்சி லீலை அம்பலம்.. திடுக்கிடும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் நரேந்திர குஷ்வாஹா என்பவர், அதே பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்குத் தொடர்ந்து ஆட்சேபனைக்குரிய குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று சாதாரணமாகத் தொடங்கிய உரையாடலைப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஆசிரியர், நவம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை வரம்புமீறிய செய்திகளை அனுப்பியுள்ளார். அதில், “மாலை 5 மணிக்கு நேரமிருக்கிறதா? வெளியே செல்லலாம்”, “நான் விரும்பும் ஆடைகளை அணிந்து வா”, “நீ மற்றவர்களை விட வித்தியாசமானவள் “நீ என்னைக் கவனித்துக்கொள்ள வேண்டும், என்னைத் தூங்க வை” என்பது போன்ற ஆபாச மற்றும் ஆட்சேபனைக்குரிய வாசகங்களை அவர் அனுப்பியிருந்தது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.
ஆசிரியரின் இந்தத் தகாத நடத்தைக்கு அந்த மாணவி கடும் எதிர்ப்புத் தெரிவித்தபோது, தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்துவிடுவேன் என நரேந்திர குஷ்வாஹா மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், பள்ளியின் கணினி ஆய்வகத்தில் தனக்கென ஒரு ‘ரகசிய அறை’ இருப்பதாகவும், ஆய்வகத்தின் ஒரு பகுதியைத் திரைகளால் மறைத்துப் பிரித்து வைத்துக்கொண்டு, அங்கு மாணவிகளைத் தனியாக அழைத்துச் சென்று அவர் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அந்த மாணவி தனது புகாரில் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதேபோன்று வேறு சில மாணவிகளிடமும் அந்த ஆசிரியர் வரம்புமீறிய உரையாடல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியரின் தொல்லை எல்லை மீறியதால், பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து மாவட்ட ஆட்சியர், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோரிடம் வாட்ஸ்அப் ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். இந்தப் புகாரின் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, ஆசிரியர் நரேந்திர குஷ்வாஹாவைக் கைது செய்தனர். கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பள்ளி வளாகத்திற்குள் ரகசிய அறை அமைத்தும், வாட்ஸ்அப் மூலமும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
