CRIME
“சார் எங்க மனைவியைக் காணவில்லை..” ஸ்டேஷனில் குழந்தைகளுடன் கதறிய கணவர்கள்.. போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் நாடகம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் நீண்டகால குடும்பத் தகராறு காரணமாக உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் தங்களது மனைவிகளைக் கொலை செய்து, உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள வீரு காட்டுப் பகுதியில் கொண்டு சென்று புதைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கொலைக்குப் பிறகு காவல்துறையினரையும் உள்ளூர் மக்களையும் திசைதிருப்ப, தாங்களே தங்களது சிறார் குழந்தைகளுடன் கும்லா காவல் நிலையத்திற்குச் சென்று மனைவிகளைக் காணவில்லை எனப் பொய்ப் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கணவர்களான சிவ சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹு ஆகிய இரு சகோதரர்களையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணையின் தொடக்கத்தில் இரு சகோதரர்களும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி காவல்துறையினரை ஏமாற்ற முயன்ற நிலையில், காவல்துறையின் தீவிர விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினை மற்றும் தகராறு காரணமாக இந்தக் கொலையைச் செய்ததாகவும், பலமுறை சமரசம் பேசியும் பிரச்சினை முடியாததால் திங்கள்கிழமை ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு இருவரையும் நிரந்தரமாக அகற்ற முடிவு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மனைவிகளைக் கொலை செய்த பிறகு இருவரின் உடல்களையும் ஆம்புலன்ஸில் ஏற்றி கும்தாவிலிருந்து சிம்டேகா மாவட்டத்தின் வீரு காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று குழி தோண்டிப் புதைத்ததாகவும், பின்னர் திரும்பி வந்து செவ்வாய்க்கிழமை காலை காவல் நிலையத்தில் காணாமல் போனதாகப் புகார் அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குற்றம் அம்பலமானதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் காட்டிய இடத்திலிருந்து இரு உடல்களையும் காவல்துறையினர் மீட்டு, சிம்டேகாவிலேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்; மேலும் உடல்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
