CRIME
“வேலியே பயிரை மேய்ந்த கதை”.. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு .. பிளிங்கிட் கிடங்கு திருட்டில் ஊழியர்களே கூட்டுச் சேர்ந்த பகீர் பின்னணி..! மேலாளர் உட்பட 4 பேர் கைது…!!
சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிளிங்கிட் நிறுவனத்தின் விநியோகக் கிடங்கில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிடங்கு மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவம்பர் 16-ஆம் தேதி வழக்கம்போல் ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, கிடங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கிடங்கு முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், ரூ.1.40 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள், ஏழு ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள் என மொத்தம் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நிறுவனத்தின் தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார், கிடங்கில் பணிபுரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நிறுவனத்தின் தற்போதைய ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் சிலர் கூட்டுச் சேர்ந்து இத்திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கிடங்கு மேலாளர் உட்பட 4 பேரைப் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்கள் மற்றும் மீதமுள்ள பொருட்களை மீட்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
