CRIME
அவசர அவசரமாக நடந்த இறுதிச்சடங்கு… மகள் கௌரவக் கொலை விவகாரம்… 3 மணி நேரத்தில் உடலை தகனம் செய்த தந்தை சிக்கியது எப்படி..?
உறவினர் ஒருவரைக் காதலித்ததற்காகப் பெற்ற மகளையே தந்தை கழுத்தை நெரித்துக் கொன்று, தற்கொலை நாடகமாடி 3 மணி நேரத்தில் இறுதிச் சடங்குகளை முடித்த கொடூரச் சதி அம்பலமாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நார்னூர் மண்டலத்திற்கு உட்பட்ட உம்ரி கிராமத்தைச் சேர்ந்த கைலாஸ் – சுமித்ரா தம்பதியினர், தங்களது 18 வயது மகள் கல்யாணிக்கு வேறொரு இளைஞருடன் இம்மாதம் 25-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக 23-ஆம் தேதி மகள் சோகமாக இருப்பதைக் கண்ட தந்தை கைலாஸ், அவரிடம் துருவித் துருவி விசாரித்தபோது, உறவினர் ஒருவரைத் தான் காதலிப்பதாக கல்யாணி கூறியுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த கைலாஸ், இரவில் மகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, உயிரிழந்த மகளின் உடலை மற்றொரு அறைக்குக் கொண்டு சென்று தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை செய்தது போல் நாடகமாடியுள்ளார். மறுநாள் காலை மகள் தூக்கில் தொங்குவதைக் கண்ட தாய் சுமித்ரா கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டுள்ளனர்.
இந்நிலையில், திருமணமாகாத பெண்களைப் புதைக்கும் லம்பாடா சமூகத்தின் வழக்கத்திற்கு மாறாக, அவசர அவசரமாக வெறும் மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே சடலத்தை எரித்து இறுதிச் சடங்குகளை முடித்ததால் கிராம மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தந்தை கைலாஸிடம் தீவிர விசாரணை நடத்தினர்; அப்போது குடும்பத்தின் கௌரவம் போய்விடும் என்ற அச்சத்தில் மகளைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
