CRIME
“எங்க இருக்க?” போன் போட்டுக் கேட்ட கணவன்.. அடுத்த நொடி ஆபீஸுக்குள் புகுந்து துள்ளத்துடிக்க வெட்டிய கொடூரம்… பட்டப்பகலில் திருமண தகவல் மையத்தில் நடந்த படுபயங்கரம்..!!
வேலூர் மாவட்டம், அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 30). இவரும் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான ஹரிபிரசாத்தும் காதலித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் தனது மனைவி கீர்த்திகாவைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த கீர்த்திகா, அரப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கீர்த்திகாவின் தாய் விஜயா, சத்துவாச்சாரி பகுதியில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தில் வேலை செய்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்தால் மருமகன் தனது மகளை ஏதாவது செய்துவிடுவார் என்ற பயத்தில், இன்று தான் வேலை செய்யும் அலுவலகத்திற்கே கீர்த்திகாவை விஜயா அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்கிடையே, மனைவியைத் தேடி சத்துவாச்சாரி பகுதிக்குச் சென்ற ஹரிபிரசாத், அவருக்கு போன் செய்து எங்கே இருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். அதற்குத் தனது தாய் வேலை செய்யும் அலுவலகத்தில் இருப்பதாகக் கீர்த்திகா தெரிவித்துள்ளார். இதையடுத்து பட்டாக்கத்தியுடன் அந்த அலுவலகத்திற்கு வந்த ஹரிபிரசாத், தனது மனைவியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் இரண்டு கை மணிக்கட்டுகள் துண்டாகி, கழுத்து, முகம் மற்றும் தாடைப் பகுதிகளில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த கீர்த்திகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் விஜயா தடுக்க முயன்றபோது, அவரையும் ஹரிபிரசாத் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் பட்டாக்கத்தியுடன் வெளியே வந்த ஹரிபிரசாத், பைக்கில் ஏறிச் சென்று சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் காதல் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் சத்துவாச்சாரி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
