LATEST NEWS
“சர்வதேச அளவில் தலைகுனிவு.. யாரும் தப்பிக்கவே முடியாது…”முன்னாள் ஆட்சியைப் புரட்டி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!!
சென்னை நீலாங்கரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் சிறப்பாகப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கல்வியே மிகப்பெரிய சொத்து என்றும், மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் சாதிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், கடந்த கால திமுக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்தார். எங்கு பார்த்தாலும் ஊழல், திக்கு திசையெங்கும் ஊழல் என கடந்த கால ஆட்சி நடைபெற்றதாகவும், ஊழல் மலிந்த ஆட்சியாக திமுக செயல்பட்டு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் பெரியார் அறிவுலகத்தில் நடைபெற்ற ஊழலே அதற்கு சாட்சி என்றும், எல்லாத் துறைகளிலும் பெரிய ஊழல் நடந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாகக் குற்றம்சாட்டிய ராஜ்மோகன், இதற்காக இருவரை பணியில் அமர்த்தியதாகவும், பாதிக்கப்பட்ட 177 பள்ளிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். நம்முடைய குழந்தைகளையும் பள்ளிக்கல்வித்துறையையும் திமுக அரசு அடகு வைத்துவிட்டதாகவும், கல்வித்துறையை ஊழல் துறையாக மாற்றி சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய யாரும் தப்பிக்கவே முடியாது என்றும் சாடிய அவர், ஏஐ மூலம் ஊழல் செய்ததாகக் கூறப்படும் திமுக அரசின் அத்தனை ஊழல்களும் ஒவ்வொன்றாக வெளியில் வந்து கொண்டிருப்பதாகக் கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
