“காலில் ராடு இருந்ததால் தப்பிக்க முடியல…” கண்முன்னே கணவரைப் பறிகொடுத்து துடிக்கும் பெண்… யமுனா எக்ஸ்பிரஸ்வேயின் கொடூரப் பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காலில் ராடு இருந்ததால் தப்பிக்க முடியல…” கண்முன்னே கணவரைப் பறிகொடுத்து துடிக்கும் பெண்… யமுனா எக்ஸ்பிரஸ்வேயின் கொடூரப் பின்னணி..!!

Published

on

யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் டெல்லி காஷ்மீரி கேட்டில் இருந்து மஹோபா நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட கொடூர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஹிசாரில் இருந்து தன் கணவர் தேவேந்திர பாரத்வாஜுடன், மாமியாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த மஹோபா நோக்கிச் சென்ற ரேகா பாரத்வாஜ் என்ற பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், இந்த விபத்தில் அவர் தனது கணவரைப் பறிகொடுத்துள்ளார். ஜேவாரில் உள்ள ஆரோக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேகா, அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதால் தனது குடும்பத்தினரின் தொலைபேசி எண்களைக் கூட நினைவுகூர முடியாமல் கதறி அழுது வருகிறார்.

தன் அனுபவித்த கொடூர சம்பவத்தைக் கூறி ரேகா அழுகையுடன் கூறுகையில், “இரவு சுமார் 11 மணியளவில் பேருந்து ஜேவார் அருகே 33-வது கிலோமீட்டர் பகுதியில் சென்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென பேருந்தில் தீ பிடித்துவிட்டது, அனைவரும் வெளியேறுங்கள் என்று ஓட்டுநர் கத்தினார். பேருந்தின் பிரதான நுழைவுவாயில் தீப்பிழம்புகளால் சூழப்பட்டிருந்ததுடன், பேருந்து முழுவதும் அடர்ந்த கருப்புப் புகை மூட்டம் சூழ்ந்தது. எல்லாரும் அலறியடித்துக்கொண்டு ஓடியபோது, ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நான் பேருந்திற்குள்ளேயே குப்புற விழுந்தேன். சுயநினைவின்றி விழுந்துகிடந்த என் மீது அனைவரும் மிதித்துக்கொண்டு ஓடினர். என் கணவர் தேவேந்திரனின் காலில் ஏற்கனவே ராடு பொருத்தப்பட்டிருந்ததால், அவரால் வேகமாக ஓடவோ பேருந்தை விட்டு வெளியேறவோ முடியவில்லை” என்றார்.

Advertisement

விபத்தில் பேருந்திற்குள் சிக்கிய தேவேந்திர பாரத்வாஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ரேகாவுக்கு தனது கணவரின் மறைவுச் செய்தி முழுமையாக இன்னும் தெரியவில்லை. மேலும், அவரது மொபைல் போன் தீயில் எரிந்து சாம்பலானதால், உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் தவித்து வருகிறார். தகவலறிந்த ஏடிஎம் (நிதி மற்றும் வருவாய்) அஜித் குமார் சிங் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரேகாவிடம் நலம் விசாரித்தார். முதல் கட்ட விசாரணையில் ஏசி-யில் ஏற்பட்ட மின்கசிவே விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், பேருந்தில் இருந்த 35 பயணிகளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், முதலுதவிக்குப் பின் 15 பயணிகள் மஹோபாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in