LATEST NEWS
“என் சீட்டைக் காணோம்..” இல்லாத சீட்டுக்கு கன்பார்ம் டிக்கெட் கொடுத்த ரயில்வே.. வாரணாசி ரயிலில் நடந்த விசித்திரச் சம்பவம்..!!
வாரணாசி சிட்டியில் இருந்து கோரக்பூருக்குச் செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்த இஷான் பஜ்பாய் என்ற பயணிக்கு, 54-வது பெர்த் எண் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் புறப்படுவதற்கு சற்று முன் ரெயிலில் ஏறிய அவர், தனக்கு ஒதுக்கப்பட்ட 54-வது இருக்கையைத் தேடியபோது அப்படி ஒரு எண் அந்தப் பெட்டியில் இல்லை என்பது தெரியவந்தது; அந்த ரெயில் பெட்டியில் மொத்தமே 52 பெர்த் சீட்டுகள் மட்டுமே இருந்ததால், சீட் கிடைக்காமல் அவர் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.
டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த பெர்த் எண்ணுக்கும் ரெயில் பெட்டியில் இருந்த உண்மையான இருக்கை எண்ணிக்கைக்கும் இடையே உள்ள இந்த முரண்பாட்டால் அவதிப்பட்ட பயணி, உடனடியாக ரெயில்வே உதவி எண்ணிற்குப் புகார் அளித்துள்ளார். இதற்குப் பதிலளித்த ரெயில்வே சார்பில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்காகப் புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசித்திரமான சம்பவம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் முன்பதிவு நடைமுறை குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தங்களுக்கு இதுபோன்று நடந்துள்ளதாகவும், ஒரு கோச்சிற்குப் பதிலாக மற்றொரு கோச்—அதாவது 2 ஏசி-க்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் தானாக 3 ஏசி-க்கு மாறியதாகவும் சிலர் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
