LATEST NEWS
“என்னை அடிங்கடா.. நான் பதில் சொல்றேன்…” வைகோ மீதான விமர்சனங்களுக்கு துரை வைகோ ஆவேச பதிலடி..!!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த மதிமுக, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தவெக அணிக்கு தாவியது. தவெகவுடன் தற்போது கூட்டணியிலும் உள்ளது. இதனால் தற்போது திமுகமீது மதிமுக தலைவர் வைகோ வைக்கும் விமர்சனங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. அதாவது, திமுகமீது இப்போது குற்றச்சாட்டுகளை அடுக்கும் இவர், ஏன் கூட்டணியில் இருக்கும்போது அக்கட்சியை கேள்வி கேட்கவில்லை என பலரும் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். மேலும் ஆளும் தவெக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில்லை என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தன் தந்தைமீதான விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார் எம்.பி. துரை வைகோ. இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுதொடர்பாக பேசிய அவர், “என் தந்தைக்கு 84 வயதாகிறது. 64 வருடங்கள் தமிழ்நாட்டிற்காக உழைத்துள்ளார்; ஐந்தரை வருட காலம் சிறையில் இருந்துள்ளார்; 6 ஆயிரம் கி.மீ. நடந்துள்ளார். அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக் கூடியவர், இன்று வயது மூப்பால் பல விஷயங்களை மறக்கிறார். அவர் உணர்ச்சிவசப்படுவதை சரி என சொல்லவில்லை. வயதானவரை உணர்ச்சிவசப்படுத்தி, அதை கட் செய்து போடுவதில் அவர்களுக்கு ஒரு சுகம். இது ஒரு ஈனப்பிழப்பு. இதில் ஒரு சந்தோஷம்.
அடிங்கடா என்ன அடிங்கடா. சமூக வலைதளங்களில் போடுங்கள். நான் அதற்கு பதிலளிக்கிறேன். தமிழ்நாட்டிற்காக உழைத்தவரை கொச்சைப்படுத்துவது கேவலம். திமுக தோழர்கள் பலர் இதைப்பார்த்து வருத்தப்படுகிறார்கள். கருத்தியல்ரீதியாக மோதுங்கள். இதுபோன்ற பொய்யான கட்டமைப்புகளை உருவாக்காதீர்கள். ஒருகாலத்தில் மேடைபோட்டு திட்டுவார்கள். இன்று காசு வாங்கிவிட்டு பதிவுகளை போடுகிறார்கள், அதுதான் வித்தியாசம்.” என ஆவேசமாக பேசினார்.
