LATEST NEWS
“நீதிமன்ற நோட்டீஸ் வரும், ஜாக்கிரதை..” தவெக அமைச்சர்களுடன் அமரும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பரந்தாமன் அட்வைஸ்..!!
தவெக அமைச்சர்கள் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது, அருகில் அதிகாரிகள் அமர்ந்திருப்பது நிர்வாக நடுநிலைக்கு எதிரானது என்று திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், முரசொலி படித்தவர்கள் அரசியல் தெளிவானவர்களே என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அரசியல் பேசுவதும், பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பதும் தொடர்கதையாகி வருவதாகக் கூறியுள்ளார். மேலும், அமைச்சர்களுக்கு இருபுறமும் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்திருக்கும் நிலையில், அரசியல் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும்போது அதிகாரிகள் அங்கே இருக்க வேண்டியதில்லை என்றும், புத்தக கொள்முதல் தொடர்பான பேட்டியின் போது அமைச்சர் ராஜ்மோகன் ‘ஆண்மை இருந்தால்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியபோது பெண் அதிகாரிகள் அருகில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டி, இப்படியான நிகழ்வுகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அகில இந்திய பணிகள் நடத்தை விதிகளின்படி, ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்படாமல் முழுமையான நடுநிலைமையைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார். அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் அரசியல் நடுநிலைமை குறித்து விதிகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாக ரீதியான விளக்கங்களை அளிக்கும் செய்தியாளர் சந்திப்புகளில் அமைச்சர்களுக்கு உதவியாக அதிகாரிகள் பங்கேற்பது சரியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளைத் தாக்கும் முழுமையான அரசியல் மேடையாக அந்தச் சந்திப்புகள் மாறும்போது அரசு அதிகாரிகள் அமர்ந்திருப்பது நிர்வாக நடுநிலைமைக்கு எதிரானது என்றும், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவது போல நடந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுத்துறை சார்ந்த தரவுகளை மட்டும் அதிகாரிகள் விளக்கிவிட்டு வெளியேறுவதும், அரசியல் ரீதியான பதில்களை அமைச்சர்கள் தனியாக வழங்குவதுமே ஆரோக்கியமான ஜனநாயக மரபாகும் என பரந்தாமன் கூறியுள்ளார். அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் இடங்களில் அதிகாரிகள் இருப்பது, அரசு இயந்திரம் ஒரு சார்பாகச் செயல்படுகிறதோ என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பிவிடும் என்றும், அமைச்சர்களின் அரசியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால், நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகளும் வழக்கில் தேவையில்லாமல் சேர்க்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். இப்படியான அவதூறு வழக்குகளில் நிகழ்வின் போது உடன் இருந்தவர்களுக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
