LATEST NEWS
ஆட்சியின் ‘ஹனிமூன் பீரியட்’-னு சொன்னா… அதை நிஜமான ‘ஹனிமூன்’-ஆகவே மாத்திட்டாங்களே.. கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் கலைஞர் பாணியில் விளாசிய உதயநிதி..!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், மதுபோதையில் அவரது முகாம் அலுவலகத்திற்குச் சென்று தகராறு செய்ததாக எழுந்த புகாரில், ஆளுங்கட்சியான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆட்சியருக்கு ஆதரவாகவும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புகார் அளிக்க வந்தபோது டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அலுவலகத்தில் இல்லை என்றும், அவர் ‘சிங்கப்பெண் படை’ பயிற்சிக்குச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை யாரும் பார்க்காத அந்த சிங்கப்பெண் படை எங்கே இருக்கிறது, அவர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய உதயநிதி, பாதிக்கப்பட்ட ஆட்சியரைத் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்புவது இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை எனச் சாடினார். மே மாதம் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில், ஜூலை மாதமே இந்தச் சம்பவம் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், “ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களை ‘ஹனிமூன் பீரியட்’ என்று நாம் சொன்னதை முதலமைச்சர் விஜய்யும், அவரது சட்டமன்ற உறுப்பினர்களும் தவறான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு விட்டார்கள் போல” என விமர்சித்தார். மேலும், ஜூலை மாதமே ஆட்சியர் இது குறித்துப் புகார் அளித்திருந்த நிலையில், அதனை முதலமைச்சரிடம் தெரிவிக்காமல் தலைமைச் செயலாளர் மூடிமறைத்துப் பேரம் பேசியுள்ளதாகவும், 116 நாட்களாக முதலமைச்சர் விஜய் தூங்கிக்கொண்டிருந்தாரா என்றும் அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
இந்தச் சம்பவம் நடக்கவே இல்லை என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறி வருவதால், மாநில அரசின் விசாரணையில் தங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எனவே, இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புகார் மனு அளித்துள்ளதாகக் கூறிய அவர், குற்றத்தை மூடிமறைக்க முயன்ற தலைமைச் செயலாளர் மீதும், புகார் மனு அளிக்க வந்தவரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
