LATEST NEWS
“மன்னிப்பு கேட்டாதான் கீழ இறங்குவேன்…” பெண் சப்-இன்ஸ்பெக்டர் செய்த காரியத்தால் 200 அடி டவரில் ஏறிய வாலிபர்.. திருடுபோன போனை மீட்கப்போய் நேர்ந்த கொடுமை..!!
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்திற்குட்பட்ட காய்காட் காவல் எல்லைக்குட்பட்ட ராமநகர் கிராமத்தில், காவல் துறையினரின் சித்திரவதைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 வயதான அங்கித் ராஜ் சௌத்ரி என்ற வாலிபர் 200 அடி உயர மொபைல் டவரில் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருடப்பட்ட தனது செல்போனை மீட்டெடுப்பதற்காக, நீதிமன்றத்திடம் இருந்து உரிய விசேஷ உத்தரவு ஆணையை பெற்றுக்கொண்டு அவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இருப்பினும், அங்கு பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் செல்போனைத் தர மறுத்து, அவருக்கு எதிராகப் பொய் வழக்கு போட்டு ஆயுள் முழுவதும் சிறையில் அடைப்பதாக மிரட்டி, தாக்குதல் நடத்தி தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையின் இத்தகைய அநீதியான நடவடிக்கையால் மனமுடைந்த அங்கித், டவரில் ஏறுவதற்கு முன்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அழுதுகொண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நடந்த அநீதியைக் கூறி, நியாயம் கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், அதிகாலை 4 மணியளவில் கிராமத்தில் உள்ள 200 அடி உயர மொபைல் டவரின் உச்சியில் ஏறி அமர்ந்துகொண்டார். கனமழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவத்தின்போது, தன்னைத் தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதும் கிராம மக்கள் திரண்டு வந்து அச்சத்துடன் அவரைக் கீழே இறங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். விஷயம் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காய்காட் காவல் நிலைய அதிகாரி ஜெய்பிரகாஷ் குப்தா தலைமையிலான காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து இளைஞரைப் பத்திரமாக கீழே இறக்கினர். இச்சம்பவம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட பெண் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
