CRIME
“என் பையன் பண்ணது தப்பு தான்… கடுமையான தண்டனை குடுங்க..” நடுரோட்டில் பெண்ணிடம் அத்துமீறிய மகனை காவல் நிலையத்தில் போட்டுக் கொடுத்த பெற்றோர்..!!”
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில், ஜமுய் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பூரிகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜகத்சிங் கிராமத்தில், நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை சிலர் தவறான முறையில் தொட்டு, கெட்ட வார்த்தைகளால் திட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். அந்த பெண் அவர்களிடம் தனியாகப் போராடி, பின்னர் எப்படியோ வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரிடம் விஷயத்தைக் கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, முதன்மை குற்றவாளி உட்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் செப்டம்பர் 15 அன்று நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சாலையில் சென்றபோது, ஏற்கனவே அங்கு காத்திருந்த இளைஞர்கள் அவரை வம்பிழுத்து துன்புறுத்தியுள்ளனர். அந்தப் பெண் “நான் என் சகோதரனைக் கூப்பிடுகிறேன்” என்று கூறிய போதிலும் அவர்கள் விடவில்லை. அப்போது அங்கிருந்த ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது. அந்த வீடியோவில் இளைஞர்கள் அப்பெண்ணிடம் அத்துமீறுவதும், அப்பெண் அவர்களிடம் தனியாகப் போராடுவதும் தெளிவாகத் தெரிகிறது. சுற்றிலும் மக்கள் இருந்தபோதிலும், அவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த கைதான இளைஞர்களின் குடும்பத்தினர், இளைஞர்கள் செய்தது மிகவும் தவறான செயல் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். பீகாரில் புதிதாக அரசு அமைந்த பிறகு பெண் பாதுகாப்பு குறித்துப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டபோதிலும், ஜமுய் மற்றும் சமஸ்திபூர் போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் பெற்றோர் மத்தியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சமும் கவலையும் நிலவி வருகிறது.
