LATEST NEWS
அடக்கடவுளே என்ன இது..? “ரயில் ஏசியில காத்து வரல…”ஏசி வென்ட்டை கழட்டிப் பார்த்த ரயில்வே ஊழியர்… உள்ளே இருந்ததைப் பார்த்து உறைந்துபோன நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!
ரயிலில் பயணிக்கும் போது திடீரென ஏசி செயல்படாமல் போவது ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா? ரயில்வேயின் பராமரிப்புக் குறைபாடுதான் இதற்குக் காரணம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயிலின் ஏசி துவாரத்திலிருந்து குளிர்ந்த காற்றிற்குப் பதிலாக, சிப்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளின் பெரிய குவியலே வெளியே எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் தளத்தில் சுபாஜித் தாஸ் என்ற பயனர் பகிர்ந்த இந்த வீடியோவில், ரயில்வே ஊழியர் ஒருவர் திருகுஆணியின் உதவியுடன் ஏசி துவாரத்தின் கிரில்லைத் திறக்கிறார். கிரில் திறக்கப்பட்டதும், உள்ளே காற்று செல்வதற்கு வழியே இல்லாத அளவுக்கு சிப்ஸ் கவர்கள், பயன்படுத்தப்பட்ட டீ கப் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திணித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த ஊழியர் துணியைப் பயன்படுத்தி அந்தக் கழிவுகள் அனைத்தையும் வெளியே எடுக்கிறார். ரயிலில் குப்பைத் தொட்டிகள் இருந்தபோதிலும், பயணிகள் சிலர் சோம்பலால் இதுபோன்ற மறைவிடங்களில் கழிவுகளைத் திணிப்பது இதனால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. பயணிகள் சிலர் தங்கள் இருக்கைகளுக்கு அடியிலும் கதவுகளுக்குப் பின்னாலும் குப்பைகளை ஒளித்து வைப்பதைப் பார்த்ததாகப் பயனர்கள் பலர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இத்தகைய நிலைக்குப் பயணிகள் மட்டுமே காரணமா அல்லது ரயில்வே நிர்வாகம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. மேலும், ரயில்களில் கூடுதல் குப்பைத் தொட்டிகளை வைப்பதுடன், சிசிடிவி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி அபராதம் விதித்தால் மட்டுமே மக்களின் இந்தத் தவறான பழக்கம் மாறும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
